நச்சுத்தன்மை கொண்ட உரங்களாலும், மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையிலும் விவசாயத்தையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வரும் செங்கல்பட்டைச் சேர்ந்த விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அடுத்த ஒத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வடிவேல், இயற்கை விவசாயத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
செயற்கை உரங்கள், அதிகளவு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து தனது நிலங்களில் இயற்கை முறை உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதில் வடிவேல் வெற்றியும் கண்டிருக்கிறார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டில் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த தன் மகனைப் போல வேறு யாரும் பிறந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க விரும்பி அதற்காகக் கர்நாடகா, ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற வடிவேல், இயற்கை உரங்கள் குறித்த பல்வேறு விதமான ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.
அதன் விளைவால் இலைக் கரைசல், பஞ்ச காவியம், மீன் அமிலம் போன்ற இயற்கைமிக்க உரங்கள் தான் வடிவேல் தோட்டத்துப் பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக விளங்கி வருகின்றன.
செயற்கை உரங்கள், இடுபொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி மகசூல் விவசாயத்தை விட, மண்புழு உரம், இலைக் கரைசல், பஞ்ச காவியம் ஆகியவற்றைக் கொண்டு சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் அதிகளவிலான மகசூலைத் தருவதாக வடிவேல் தெரிவித்திருக்கிறார்.
மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏதுவாக விவசாய முறையையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி வடிவேலு மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.