மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நவம்பர் 26ம் தேதி- எந்தவொரு இந்தியராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத நாளாகும்.17 ஆண்டுகளுக்கு முன், மூன்று நாட்கள் தொடர்ந்து 60 மணி நேரத்துக்கும் மேலாக மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் உலகையே உலுக்கியது. பாகிஸ்தானில் இருந்து, லஷ்கர் இ தொய்பாவின் 10 தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்கு வந்தனர்.
சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, வாகனங்களைக் கடத்தி சென்றனர். தெற்கு மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையம், இரண்டு சொகுசு ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தினர்.
சுமார் 60 மணி நேரம் நீடித்த தீவிரவாத தாக்குதல்கள் ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 18 பாதுகாப்புப் படையினர், 6 அமெரிக்கர்கள் உட்பட 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப், குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி தூக்கிலிடப்பட்டான்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இந்தக் கொடூர தாக்குதல் மறக்க முடியாத, மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. மும்பை தாக்குதலைத் திட்டமிட்டவர்களில், ஒருவரான பாகிஸ்தான் அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, அப்ரூவர் ஆக மாறினார்.
லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் இணைந்து தஹாவூர் ராணா சதி செய்தது விசாரணையில் கண்டு பிடிக்கப் பட்டது. பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட 64 வயதான தஹாவூர் ராணா, மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் வழக்கு தொடரப் பட்டது. லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்துக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை ராணா செய்து வந்தது நிரூபிக்கப் பட்டது. அந்த வழக்கில், ராணாவை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தஹாவூர் ராணா லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப் பட்டார். விசாரணைக்காக, ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் மத்திய அரசுக் கோரிக்கை வைத்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் என்பதற்காக, இந்திய சிறையில் தனக்கு கொடுமைகள் செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனுவை, கடந்த ஜனவரியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியிடம், தஹாவூர் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
மிகக் கொடிய தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கியவர், இந்தியாவில் விசாரணையைச் சந்திக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். நாடு கடத்தப் படுவதற்கு எதிராக மீண்டும், உச்ச நீதிமன்றத்தில் ராணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப் பட்டது.
இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து தஹாவூர் ராணா டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளார். நாடு கடத்தப் பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
தீவிரவாதியான தஹாவூர் ராணாவை நாடு கடத்தி, இந்தியாவுக்கு கொண்டு வந்திருப்பது, பிரதமர் மோடியின் ராஜதந்திரத்தின் பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.