இனி பணக்காரராக இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தனது 99 சதவீத செல்வத்தை அறக்கட்டளைக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், சொத்துக்களில் ஒரு சதவீதம் மட்டுமே தனது குழந்தைகளுக்குத் தருவேன் என்று பில் கேட்ஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
100 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ள செல்வந்தர்கள் வரிசையில் உலக அளவில் வெறும் 15 பேர்கள் மட்டுமே உள்ளனர். இதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸும் ஒருவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பில் கேட்ஸ் வரவில்லை. தந்தை பிரபல வழக்கறிஞர் என்பதால், சிறுவயதில் பணம் பில் கேட்ஸ்க்கு ஒரு பிரச்சனையாக இல்லை.
தொடக்கப் பள்ளியிலேயே பில் கேட்ஸ், டெலிடைப் மூலம், Main Frame கம்ப்யூட்டரில் தான் பாடம் பயின்றார். அப்போது, பள்ளி ஆசிரியர்களுக்கே கிடைக்காத வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சிறு வயதிலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தன் நண்பருடன் சேர்ந்து தொடங்கினார். கணினித்துறையின் அசுர வளர்ச்சியால், மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது.
உலகின் 13 வது பணக்காரரான பில் கேட்ஸ், 117 பில்லியன் அமெரிக்க டாலர் தனிப்பட்ட செல்வத்தை வைத்துள்ளார். கேட்ஸ் அறக்கட்டளையின் 67 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடைய அறக்கட்டளையையும் பில் கேட்ஸ் மேற்பார்வையிடுகிறார் .
மொத்தமாக பில் கேட்ஸின் 184 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து என்பது, பல்கேரியா நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பாகும். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு ஏழை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் விட பில் கேட்ஸின் சொத்து அதிகமாகும்.
தனது செல்வத்தின் பெரும்பகுதி பிறருக்கு உதவுவதில் செலவிடப் படும் என்று கூறிய பில் கேட்ஸ், அதற்காக, கேட்ஸ் அறக்கட்டளையை அமைத்தார். ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாய்ப்புள்ள ஒரு உலகத்தை உருவாக்குவதே அறக் கட்டளையின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார். கேட்ஸ் அறக்கட்டளை தொடங்கப் பட்டு வரும் மே மாதத்துடன் 25 ஆண்டுகள் நிறைவாகிறது.
மிகவும் சிறுவயதில் இருந்தே மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் நல்லபழக்கம் தன்னிடம் இருந்ததாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அவருடைய அம்மா, பணம் வரும் போது, அதை மற்றவர்களுக்கு வழங்கும் பொறுப்பும் கூடவே வருகிறது என்று கூறியதாக பில் கேட்ஸ் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பில் கேட்ஸ், தனது அறக்கட்டளைக்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்கா டாலர் வரை நன்கொடை வழங்கி உள்ளார். இப்போதும் அவரால், தனி விமானத்தில் பறக்கும் அளவுக்கு சொத்துகள் உள்ளன.
இந்நிலையில், 99 சதவீத செல்வத்தை அறக்கட்டளைக்குக் கொடுக்கப் போவதாகவும், இனி பணக்காரராக இருக்க விருப்பமில்லை என்றும் பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார். தனது குழந்தைகளுக்கு ஒரு சதவீத செல்வத்தை மட்டுமே தரப் போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஒரு சதவீத சொத்துகளே பில் கேட்ஸின் குழந்தைகளை உலக பணக்காரர்களில் ஒருவராக வைத்திருக்கும்.
27 வருட திருமணமான வாழ்க்கையில் பில் கேட்ஸு க்கு ஜெனிஃபர் கேத்தரின் கேட்ஸ், ரோரி ஜான் கேட்ஸ் மற்றும் ஃபோப் அடீல் கேட்ஸ் என மூன்று குழந்தைகள் உள்ளனர். 2021 ஆம் ஆண்டு, பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளுக்கும் ஒரு சதவீத சொத்து என்றாலே ஒவ்வொருவருக்கும் 12,900 கோடி ரூபாய் கிடைக்கும். ஏனெனில் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 12.9 லட்சம் கோடி ஆகும்.
தான் அனுபவித்த அசாதாரண அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகளின் நிழலில் தன் குழந்தைகள் வாழக்கூடாது என்று விரும்புவதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகள் தங்கள் சொந்த அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு, சுதந்திரமாக வெற்றியை அடைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பில் கேட்ஸ் போலவே, வாரன் பஃபெட், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஆகியோரும் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியான லாரன் பவல் ஜாப்ஸும் தனது குழந்தைகளுக்குச் சொத்துக்கள் கொடுக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி உலகப் பெரும் பணக்காரர்கள், தங்கள் சொத்தில் பெரும்பகுதியைத் தொண்டு செய்வதற்காக நன்கொடை வழங்குவது, நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.