திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கிக் காணப்படுவதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக
நேதாஜி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு கட்டிடத்தில் தண்ணீர் தேங்கியது.
மேலும், மேற்கூரையில் இருந்து வடிந்து வரும் தண்ணீர் மின்சார பெட்டி, மின் விளக்குகள், மின் கம்பிகள் மீது வழிவதால் மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாகச் செல்லும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேல் தளத்தில் நடைபெற்று வரும் பூச்சு வேலை ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தான் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நோயாளிகள், அதனை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.