ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் தொழில்முனைவோர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆட்சிக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்தபின் அதனை நிறைவேற்ற மறுப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசுக்குத் தொழில்முனைவோர் விடுத்திருக்கும் கோரிக்கைகளை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன், சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சலுகை விலையில் மின் கட்டணம், புதிய காற்றாலை அமைக்க அனுமதி, விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை, டெண்டர் விலையில் 10 சதவீத சலுகை, சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் குழு.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் சில தான் இவை. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பல தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியது.
தொற்று பரவல் குறையத் தொடங்கி படிப்படியாக மீண்டு வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஒரேயடியாக முடக்கும் வகையில் மின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியது திமுக அரசு. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இடமாகத் திகழும் கோவையில் தொழில் முனைவோர்களின் நிலை மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பம்ப் செட் உற்பத்தி தொழில், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொழிலாக இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க தொழிலும் மின் கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வால் முடங்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி நிறைவடைய ஓராண்டே மீதமிருக்கும் நிலையில், கோவை மாநகர தொழில் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிநாடுகளுக்குப் பயணம், தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனக் கவனம் செலுத்தும் தமிழக அரசு, சொந்த மாநிலத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில்முனைவோர் மத்தியிலிருந்து எழுந்துள்ளது.