தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்புத்தாண்டையொட்டி விஸ்வரூப தீபாராதணையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் கோயில் உட்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடமும், சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றி பட்டையும் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதேபோல், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர்கோவில் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.