தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக் காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை, கடலுக்குச் செல்லாமல், துறைமுகத்தில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.