பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இனி அவருடைய குழந்தையையும், குடும்பத்தையும் மட்டுமே கவனிப்பார் எனவும், இனி அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் மீது புகார் தெரிவித்தார்.
ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளிடம் அவர் புகார் அளித்தார். இந்த சம்பவம் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.