மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் மற்றும் கள்ளழகர் கோயில்களின் சித்திரை திருவிழா ஏப்ரல் 28 முதல் மே 16 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் மகுடமாக மே 12ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், வைகை ஆற்றில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிம்மக்கல் கல்பாலம் பகுதியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை 2 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.