கடன் மோசடி வழக்கில், இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, சிபிஐயின் உத்தரவின் பேரில்,பெல்ஜிய காவல்துறையினால் கைது செய்யப் பட்டுள்ளார். யார் இந்த மெகுல் சோக்ஸி ? எங்கே தலைமறைவாக இருந்தார் ? ஏழு ஆண்டுகளுக்குப் பின், மெகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மெகுல் சோக்ஸி கைது என்பது உடனடியாக நடக்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளின் தொடர் முயற்சிகளின் பலனாகவே மெகுல் சோக்ஸி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுபத்தைந்து வயதான மெகுல் சோக்ஸி பரம்பரை வைர வியாபாரியாவார். இந்தியாவில் சுமார் 4,000 கடைகளைக் கொண்ட சில்லறை நகை நிறுவனமான கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளரான இவர் வைர நகை சந்தையில் முடி சூடா மன்னனாக ஆசைப்பட்டார்.
தனது வாழ்க்கையை மிகவும் ஆடம்பரமாகக் காட்டியே, தனக்கென ஒரு மாய பிம்பத்தை உருவாக்கினார். இதனாலேயே, மெகுல் சோக்ஸி, வைர உலகின் விஜய் மல்லையா என்று கூறப்பட்டார்.
2018ம் ஆண்டில், பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடியில் மெகுல் சோக்ஸி முதன்முதலில் சிக்கியபோது, மெகுல் சோக்ஸியின் பிம்பமும், சாம்ராஜ்ஜியமும் சரிந்தது. இவரும், இவரது மருமகன் நீரவ் மோடியும் மோசடியான உறுதிமொழி கடிதங்களைப் பயன்படுத்தி 13,850 கோடி ரூபாய், மக்கள் பணத்தை மோசடி செய்தனர். இது இந்திய வங்கி வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்.
மெகுல் சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் மோசடியில் ஈடுபடவில்லை. ஐசிஐசிஐ, ஐடிபிஐ, மற்றும் எல்ஐசி ஆகியவற்றிலும் பல்லாயிரக் கணக்கான கடன்களைப் பெற்ற அவரது, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்,கடன்களைத் திரும்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது.
கூடுதலாக, சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ், பல்வேறு ஃபெமா விதிமுறைகளையும் மீறி, சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இந்தியாவை விட்டு தப்பியோடிய மெகுல் சோக்ஸி, 2017ம் ஆண்டு ஆன்டிகுவா நாட்டில் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் குடியுரிமை பெற்றார். 2021ம் ஆண்டில், இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக சோக்ஸி, ஆன்டிகுவாவிலிருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். அவரது திட்டம் தோல்வியடைந்தது. கியூபாவுக்குச் செல்லும் வழியில் டொமினிகன் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கு நாடுகடத்திக் கொண்டு வர சிபிஐ முயன்றது. ஆனால், ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக ஆன்டிகுவாவுக்கு செல்ல வேண்டும் என்றும், சிகிச்சை முடிந்த பிறகு நிச்சயம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும், மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர்கள், டொமினிகன் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சுமார் 51 நாட்கள் சோக்ஸி சிறையில் இருந்த போதும் அவரை, நாடுகடத்தும் முயற்சி வெற்றி பெறவில்லை. மெகுல் சோக்ஸி மீண்டும் ஆன்டிகுவா நாட்டில் தலைமறைவானார். தொடர்ந்து, தங்கள் கண்காணிப்பு வளையத்திலேயே மெகுல் சோக்ஸியை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வைத்திருந்தார்கள்.
அதன்படி, கடந்த ஆண்டு, அவர் பெல்ஜியத்துக்குச் சென்றதை உறுதிசெய்த இந்திய அதிகாரிகள், பெல்ஜியம் அரசிடம் மெகுல் சோக்ஸி ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தனர். சோக்ஸியின் மனைவி பிரீத்தி பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்பதால், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பெல்ஜியத்தில் வசிப்பிட அட்டையை சோக்ஸி பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மெகுல் சோக்ஸியை பெல்ஜியம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியா மற்றும் ஆன்டிகுவாவின் குடிமகன் என்பதையும் பெல்ஜியம் அரசிடம் மெகுல் சோக்ஸி மறைத்துள்ளார்.
ஏற்கெனவே, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டில், மும்பை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு கைது வாரண்டுகளின் அடிப்படையில், மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரான சோக்ஸியின் வழக்கறிஞர்கள், அவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியத்தில் இருப்பதாகவும் இதனால் இந்தியா திரும்ப முடியாது என்றும் முறையிட்டனர். அதேநேரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மெகுல் சோக்ஸியை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர்.இதனையடுத்து,மத்திய அரசு எடுத்த முயற்சியாலேயே பெல்ஜியத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், இதே வழக்கில், இங்கிலாந்து சிறையில் இருக்கும் மெகுல் சோக்ஸியின் மருமகன் நீரவ் மோடி மீதும் நாடு கடத்தல் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.