அமெரிக்காவில் முதன்முறையாக பெண்கள் அடங்கிய குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்து பூமிக்கு பத்திரமாக திரும்பி புதிய சாதனை படைத்துள்ளனர்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நியூ செப்பர்டு என்ற விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. அதன்படி, விண்வெளிப் பயணத்தில் புதிய முயற்சியாக பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை இந்த நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியது. ஜெஃப் பெசாசின் காதலி லாரன் சான்செஸ், பாப் பாடகி கேட்டி பெர்ரி உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்றனர்.
பூமியின் வளிமண்டலத்துக்கு மேல் உள்ள கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த பெண்கள் குழு, விண்வெளியில் இருந்தபடி பூமியின் அற்புதமான காட்சிகளை கண்டு களித்தனர்.
அவர்கள் 11 நிமிட பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, பத்திரமாக பூமிக்கு திரும்பினர். பாராசூட் உதவியுடன் விண்கலனில் வந்திறங்கிய அவர்கள், கண்ணீர் சிந்தியும், பூமிக்கு முத்தமிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக விண்கலனில் பெண்கள் மட்டும் பயணித்து விண்வெளிக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.