அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் நோக்கில் அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பேரவைத் தலைவர் ஏற்க மறுத்ததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களை இழிவாகப் பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவையில் மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரச் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவிடம் முறையிட்டோம் என்றும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதனால் அதிமுக வெளிநடப்பு செய்ததாகக் கூறிய அவர், கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றும் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.