டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு, தமிழக அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விசாரணை தொடங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதன் நோக்கம் என்ன எனக் கேள்வி எழுப்பினர்.
சோதனை செய்த நாளில் முதல் தகவல் அறிக்கையைத் தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை என்றும் வாதிட்டனர். இதையடுத்து ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால், மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு, மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாம் என அறிவுறுத்தினார். இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் தமிழகக் காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.