பாளையங்கோட்டை அருகே தனியார் பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பென்சில் பிரச்னை தொடர்பாக இரு மாணவருக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மாணவர், மற்றொரு மாணவரை அரிவாளால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரிவாளால் தாக்கிய மாணவர் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இளஞ்சிரார்களுக்கான நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவரை வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மிகுந்த மன இறுக்கத்தில் உள்ள மாணவருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை வந்த மாணவர்களின் பைகள் சோதனை செய்யப்பட்டன. 8ஆம் வகுப்பு மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அனைத்து மாணவர்களின் புத்தகப் பைகளையும் சுழற்சி முறையில் சோதனை செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்த நிலையில், காலை பள்ளிக்கு வந்த மாணவர்களின் பைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.