தமிழகத்தில் சிறு கனிமங்களுக்கான வரியை நீக்கக் கோரி கிரஷர் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குவாரி உரிமையாளர்கள் பிற கட்டணங்களுடன் சேர்த்து, நிலவரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் சிறு கனிமங்களுக்கு கனமீட்டர் அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டன் கணக்கில் மாற்றி வரி வசூலிக்கப்படுகிறது.
இதனால் சிறு கனிமத்தின் மீது 180 மடங்கு வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை யூனிட்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை உயரும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, சிறு கனிம வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதுமுள்ள 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு தங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு கனிமங்களுக்குத் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.