அவிநாசி அருகே தனியார் அரிசி ஆலையில் 24 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி ஆலைக்கு, ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்குச் சென்ற தனிப்படை போலீசார் அரிசி ஆலையில் நடத்திய சோதனையில், 24 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட அரிசி ஆலை உரிமையாளர் தண்டபாணி மற்றும் மேலாளர் விஜயகரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, வட மாநில இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்