அல்வாவுக்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் தமது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதற்கு அவரது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
யாராவது ஒருவர் நம்மை ஏமாற்ற முயன்றால் “எனக்கே அல்வா கொடுக்க பாக்குறியா” என்று கேட்போம். ஆனால் அத்தகைய அல்வாவை சுவைப்படத் தயாரிக்கும் இருட்டைக்கடைக்கே அல்வா கொடுக்க முயல்வதாக பல்ராம் சிங் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நெல்லைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவது இருட்டுக்கடை அல்வா. 1940-களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு, தற்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது இந்த அல்வா கடை.
மின்விளக்குகள் அதிகமில்லாத காலத்தில் தொடங்கப்பட்டதால் இருட்டுக்கடை என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக்கடையின் உரிமையாளரான ஹரிசிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவரது மனைவி கவிதா சிங் கடையை கவனித்து வருகிறார். இந்த தம்பதியின் மகளான ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தமது கணவர் பல்ராம் சிங் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார் ஸ்ரீ கனிஷ்கா.
எனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருக்கிறார். இதுகுறித்து உன் வீட்டில் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். என்னிடம் உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரோ என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன் இது குறித்து மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன் என இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தெரிவித்தார்.
பல்ராம் சிங்கின் கொடுமை தாங்க முடியாமல் ஸ்ரீ கனிஷ்கா தங்களது வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் அதனைத்தொடர்ந்து இருட்டுக்கடையை தமது பெயருக்கு எழுதித்தர வேண்டும் என மருமகன் மிரட்டுவதாகவும் கவிதா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பல்ராம் சிங்கும் அவரது தந்தை யுவராஜ் சிங்கும் தங்கள் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இருட்டுக்கடை விவகாரத்தில் யார் யாருக்கு அல்வா கொடுக்க முயல்கிறார்கள் என்பது காவல்துறை விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.