தஞ்சையில் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சர்மிளா உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடுக்காவேரி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை, கடந்த 8-ந் தேதி கைது செய்த போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் மனமுடைந்த தினேஷின் சகோதரிகள் மேனகா, கீர்த்திகா ஆகியோர் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக திருவையாறு காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மேலும் 3 அதிகாரிகள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தினேஷுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.