கர்நாடக அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடையும் என அம்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும், 18 சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில், ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, 3வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 95 சதவீத லாரிகள் ஓடவில்லை என்றும், இதனால், கர்நாடகாவுக்கு தினசரி 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பார்டர் செக்போஸ்ட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறியுள்ள அவர், கர்நாடக முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள கிரஷர் உரிமையாளர்களுக்கு அம்மாநில அரசு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.