ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பதாகவும், திடீரென கேள்வி கேட்டால் பதில் சொல்வது கடினம் எனவும் அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கும்பகோணத்தில் ஒரு அணையாவது கட்டித்தர வேண்டும் என எம்எல்ஏ அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு தயாராக வருவதாகவும், உறுப்பினர்களின் துணைக்கேள்விக்கு முன்கூட்டியே தயாராக முடியாது எனவும் பதிலளித்தார்.
தொகுதி மீது அக்கறை உள்ள எம்எல்ஏ அன்பழகன், தனிக்கேள்வியை கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது பேசிய பேரவைத் தலைவர், துரைமுருகனின் நீண்ட அனுபவம் மற்றும் நினைவாற்றலின் அடிப்படையில் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுப்பினர் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த துரைமுருகன், ஒரு கேள்விக்கு பதில் சொல்ல சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவதாகவும், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தவறாக போய்விடக்கூடாது என்ற பயமும் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, துரைமுருகனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.