சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் உள்ளிட்ட இருவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்குக் காத்திருப்பு அறை மற்றும் நூலகம் உள்ளிட்டவற்றைக் காவல் ஆணையர் சரவண சுந்தர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக இலவச வைஃபை வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாகத் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய அவர், மாணவர்கள் அளித்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சிறுமிகள் புகாரின் அடிப்படையிலேயே மதபோதகர் ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது மைத்துனர் பென்னட் ஹாரிஸ் ஆகிய இருவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.