கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைப் பாதாம் கட்டுப்படுத்துகிறது என்று புதிய ஆய்வில் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. ஒரு நாளுக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம் ? இதய நலனுக்கும் உடல் எடை குறைப்புக்கும் பாதாம் எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பாதாம் பருப்பில், புரதம், நல்ல கொழுப்பு, நார்ச் சத்து,துத்தநாகம், மெக்னீசியம் உள்ளிட்ட 15 அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன. பொதுவாகப் பாதாம் உடல் நலத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும்,தொடர்ந்து பாதாம் பருப்பை அதிகமாகச் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், பன்னாட்டு மெட்டா பகுப்பாய்வு ஆராய்ச்சி புதிய தகவலை உண்மைகளைத் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் பாதாம் வாரியத்தின் ஆதரவால், டாக்டர் மார்க் கெர்ன், டாக்டர் அலிசன் கோட்ஸ் மற்றும் டாக்டர் அனூப் மிஸ்ரா ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளைத் தனித் தனியே செய்துள்ளனர்.
சமீபத்தில் “ஊட்டச்சத்து முன்னேற்றங்கள் பார்வையில்” என்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி, தினசரி பாதாம் சாப்பிடுவது, உடம்பு வலியைக் குறைக்கிறது என்றும், தசை வலிமையை அதிகரிக்கும் என்றும், தசை அழற்சியைத் தடுக்கிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ரத்த சர்க்கரை அளவை பாதாம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை விளக்கியுள்ள இந்த ஆய்வு, இதய நலத்துக்குப் பாதாம் நன்மை அளிக்கிறது என்று நிரூபித்துள்ளது. நீரிழிவுக்கு முந்தைய சில நபர்கள் ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் 20 கிராம் பாதாமை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அளவாக வைத்திருக்க உதவுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நபர்களுக்குக் குறிப்பிடத்தக்க எடை குறைப்பையும் பாதாம் உருவாக்குகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
காலையிலும் மாலையிலும் அரைக் கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடவேண்டும், நீரழிவு நோயாளிகள் உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாகப் பாதம் பருப்பைச் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர் அனூப் மிஸ்ரா ஆலோசனை கூறியுள்ளார். உடல் பருமன் என்ற இதழில் வெளியான இந்த மூன்று ஆராய்ச்சிகளும், பாதாம்- நீரழிவு நோயாளிகளுக்குச் சிறந்த ஊட்டச் சத்தாகும் என்று நிரூபித்துள்ளன.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பாதாம், இரத்த சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கவும், உடல் எடையைப் பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.