தமிழ்நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன் தற்போது இந்தியாவின் முன்னணி நிறுவனமான TCS தலைமைப் பதவியை வகித்து வருகிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை விரிவாகப் பார்க்கலாம்.
N.சந்திரசேகரன்… இந்தப் பெயரைக் கேட்டதும் “இந்தியாவின் சக்திவாய்ந்த தொழில் சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அடக்கமான மனிதர்” என்றெண்ணத் தோன்றும். ஆனால் சாதாரண ஊழியர் முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் வரையிலான அவரது பயணம் FEEL GOOD திரைப்படத்துக்கான சிறந்த கதையைக் கொண்டது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த சந்திரசேகரன், மும்பையில் முகேஷ் அம்பானியின் பிரமாண்டமான ANTILIA பங்களாவுக்கு அருகே சொகுசு வீட்டில் வசிக்கிறார் என்பது சாதாரண செய்தி அல்ல. கடும் உழைப்பும் உறுதியும் தெளிவான சிந்தனையும் இருந்தால் பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பதற்குச் சந்திரசேகரனின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.
தனிநபராக மட்டுமின்றி தலைமைப் பண்பு மிக்க நிர்வாகியாகவும் தன்னை மெய்ப்பித்துள்ளார் சந்திரசேகரன். அவர் தலைவரான பிறகு டாடா சன்ஸ் நிறுவனம் புதிய உயரங்களை எட்டியிருக்கிறது.
1963-ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர் சந்திரசேகரன். பெரு நிறுவனங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத விவசாயக் குடும்பம் அவருடையது. எனினும் கணினி மற்றும் தொழில்நுட்பம் மீதான ஆர்வம்தான் தொழில்துறையை நோக்கி சந்திரசேகரன் வரக்காரணம்.
அரசுப்பள்ளியைத் தொடர்ந்து கோவையில் பொறியியல் படிப்பில் APPLIED SCIENCE படித்த சந்திரசேகரன், பின்னர் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் MCA பட்டம் பெற்றார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு சவால்களைச் சந்தித்தபோதும் தொழில்நுட்ப உலகில்தான் தமது பயணம் என்பதைச் சந்திரசேகரன் அறிந்திருந்தார். இருப்பினும் தமிழ்நாட்டு வயல்வெளிகளிலிருந்து மும்பையின் வானளாவியக் கட்டடங்களுக்குச் செல்வோம் என்று அவர் நினைத்திருக்கமாட்டார்.
1987-ஆம் ஆண்டு TCS நிறுவனத்தில் பயிற்சி ஊழியராகச் சேர்ந்தார் சந்திரசேகரன். ஒருநாள் அவர் டாடா சன்சுக்கே தலைவராக வருவார் என்பது சந்திரசேகரன் உட்பட யாருக்குமே தெரியாது. அர்ப்பணிப்பு, திட்டமிடலுடன் கூடிய தெளிவான சிந்தனை, தலைமைப் பண்பு போன்றவற்றால் உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த சந்திரசேகரன், படிப்படியாக வளர்ந்து TCS நிறுவனத்தின் CHIEF OPERATING OFFICER என்ற பெரும் பொறுப்புக்கு 2007-ஆம் ஆண்டு வந்தார்.
இரண்டு வருடங்கள் கழித்து தமது 46-ஆவது வயதில் TCS-ன் தலைமைச் செயல் அதிகாரியானார். டாடா குழும வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் இத்தகைய உயர் பொறுப்புக்கு வந்தநபர் சந்திரசேகரன்தான். அவரது தலைமையின்கீழ் TCS நிறுவனத்தின் புதிய சகாப்தம் தொடங்கியது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக TCS மாறியது.
2016-ஆம் ஆண்டு TATA SONS நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைந்தார் சந்திரசேகரன். அதற்கடுத்த ஆண்டு TATA SONS நிறுவனத்தின் தலைவரானார். அவருக்கு முன்பு அந்தப் பதவியை வகித்தவர் ரத்தன் டாடா என்பது இங்கே குறிப்பிட வேண்டிய செய்தி. அதுமட்டுமல்ல… டாடா குடும்பத்தைச் சேராத ஒருவர் அந்தப் பதவிக்கு வந்தது அதுவே முதன்முறை.
TATA SONS தலைவரான பிறகு முன்னோடிகளின் மரபையே பின்பற்றாமல் அவற்றை மாற்றியமைத்து வருவாயை அதிகப்படுத்தினார் சந்திரசேகரன். டாடா நிறுவனத்தின் சர்வதேசச் சந்தையை விரிவுப்படுத்திய அவர், டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தினார். லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், டாடா குழுமத்தின் நற்பெயர் கெடாத வகையில் செயல்பட்டார்.
இந்தளவுக்கு உழைக்கும் ஒருவருக்கு அதற்கேற்ற ஊதியத்தை டாடா குழுமம் கொடுக்காமல் இருக்குமா? 2019-ல் 65 கோடி ரூபாயாக இருந்த சந்திரசேகரனின் ஆண்டு வருமானம், 2021 – 2022-ல் 109 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதன்மூலம் அதிக ஊதியம் பெரும் நிர்வாகி என்ற இடத்துக்கு வந்தார் சந்திரசேகரன். அதனைத்தொடர்ந்து அவரது ஊதியம் மேலும் உயர்ந்து 135 புள்ளி 3 கோடி ரூபாய் ஆனது.
CORPORATE உலகில் சந்திரசேகரன் அடைந்த வளர்ச்சி ஆடம்பர வாழ்க்கைக்கு வழிவகுத்தது. 2022-ஆம் ஆண்டு மும்பையில் 98 கோடி ரூபாய்க்குச் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கினார். பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களாவுக்கு அருகே ஆறாயிரம் சதுரடி கொண்ட குடியிருப்பை 5 ஆண்டுகள் லீசுக்கு எடுத்திருந்த சந்திரசேகரன் பின்னர் அதைச் சொந்தமாக்கிக் கொண்டார். இது அவரது வெற்றியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
சந்திரசேகரனின் மனைவி பெயர் லலிதா. இந்த தம்பதிக்கு பிரணவ் என்ற மகன் உள்ளார். தமது குடும்பத்தைப் பற்றி பொதுவெளியில் பேசுவதை சந்திரசேகரன் விரும்பமாட்டார். தற்போதைய சூழலில் அவரது சொத்து மதிப்பு 855 கோடி ரூபாய்.
எளிய பின்னணியிலிருந்து இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அடைந்திருக்கும் சந்திரசேகரனின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடியது என்றால் அது மிகையல்ல.