காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளியை போலீசார் சுட்டுக் கொல்லப் போவதால் அவரது வழக்கு விசாரணையை காணொலி காட்சி வாயிலாக நடத்த உத்தரவிடக்கோரி அவரது சகோதரி சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி தனபால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை காளியை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்ய வாய்ப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது சமீபகாலமாக என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதி, சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன என கேள்வி எழுப்பினார்.
மேலும், காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டிய நீதிபதி, காவல்துறையினரின் பாதுகாப்பிற்காக மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது எனவும், குற்றவாளிகளை காலுக்கு கீழே சுட்டு பிடியுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இதுவரை 2 காவல்துறையினர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.