ராமேஸ்வரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதிகளில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதால், பவளப் பாறைகளை உடைத்து சேதப்படுத்துபவா்கள் மீது வனத்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு தளம் அமைக்க கான்கிரீட் கட்டுமானப் பணி தொடங்கி உள்ளது. இதற்காக, 119 மீட்டா் வரை பவளப் பாறையை உடைத்து, 10 மீட்டா் ஆழத்துக்கு துளையிட்டு 22 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் தீவுப் பகுதியை கடல் அரிப்பில் பவளப் பாறைகள் பாதுகாப்பதால், இந்தப் பாறைகளை சேதப்படுத்தாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.