கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கணிதமேதை ராமானுஜன், அறிஞர் அண்ணா, சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
அத்துடன் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்தி பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆலோசனை வழங்கினார்.