தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாசத்துக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் என் அருமைத் தாமரை சொந்தங்களே
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், நம் கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், நம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சியும் வளர்ச்சியும் கிடைக்கச்செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் நம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது.
நம் அனைவரின் ஒற்றை இலக்கு மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அவலங்களை எல்லாம். வரும் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே; அதற்கு திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.
ஆகவே நம் அனைவரின் செயல்பாடுகளும் அந்த ஒற்றை இலட்சியத்தை அடைவதற்கு உதவிகரமாக அமைய வேண்டும், கொழுந்துவிட்டு எரியும் உங்களின் ஆர்வமும் துடிப்பும், நம் கட்சியின் வளர்ச்சிக்கு உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர உங்கள் ஆர்வம் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் அமையக்கூடாது.
இனி நாம் செய்ய வேண்டியது திமுகவை தீவிரமாக எதிர்ப்பதும் திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மட்டுமே முக்கியமான கடமையாகும். இது தவிர சுவர் விளம்பரங்களிலும், கட்சிக்கான விளம்பரத்தை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த அமைய வேண்டுமே தவிர எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது.
தேசிய ஜனநாயக் கூட்டணி என்பது நம் பலம் அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு அறிவிப்பார்கள், கட்சியின் வளர்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும் நம் எதிர்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது.
தாழ்வுற்றுக்கிடக்கும் தமிழகத்தை மீட்பதற்காகவும், தரணியெங்கும் புகழ் வீசும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்ற வெற்றி இலக்குடன் நாம் தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.