கோயில் நிதியை எடுத்து கல்லூரி கட்டுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பழனி முருகன் கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பழனி முருகன் கோயில் நிதியை வைத்து தோப்பம்பட்டியில் கல்லூரி கட்ட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கோயில் நிதியை வைத்து கல்லூரி கட்டுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது கல்லூரி கட்ட டெண்டர் மட்டுமே கோரப்பட்டதாகவும், கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனவும் அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.