காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதிகேசவர், மோகினி அவதாரம், தங்க பல்லக்கு, யாளி வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி சிறப்பு தரிசனம் கொடுத்தார்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பின்னர் மேள தாளம் முழங்க கோயில் வளாகத்தில் வலம் வந்த உற்சவர் பெருமாள், பிரம்மாண்ட தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.