திமுக ஆட்சியில் “Out of Control” ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் தமிழக முதல்வர் சரி செய்யட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவிதுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக-வின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்தி, அவர்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கியே தீருவோமென்ற உறுதியோடு பாஜக-அஇஅதிமுக கட்சிகள் இணைந்ததில் முதல்வர் ஸ்டாலின் பேரச்சம் தொற்றிக்கொண்டது போல் தெரிவதாக கூறியுள்ளார்.
நம் கூட்டணி குறித்த திமுக-வின் பயமும் பதற்றமும் நியாயமானதே. ஏனெனில் இந்த கூட்டணிக்கு பெருகும் மக்கள் ஆதரவைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆகவே தான். மேடைக்கு மேடை நமது வலிமை மிகுந்த கூட்டணியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில், முதல்வர் அவர்களிடமிருந்து தமிழகம் தான் “Out of Control”-லில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, போதைக்கலாச்சாரம், ஊழல், சாதிய மோதல்கள் மற்றும் சமூக சீர்கேடு, விலைவாசியால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம். நிறைவேற்றாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை, நிலைகுலைந்து இருக்கும் அரசுத் துறைகள், கட்டுப்பாடும் ஒழுக்கமுமின்றி நடந்து கொள்ளும் அறிவாலய அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் என “Out of Control”-பட்டியல் நீண்டு கொண்டே போகும் என கூறியுள்ளார்.
ஆக. இத்தனை விஷயங்கள் முதல்வரின் “Out of Control”-லில் இருக்கும் போது, “தமிழகம் டெல்லிக்கு Out of Control” என்று அவர் கூறுவது நகைப்பிற்குரியது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நமது வெற்றிக் கூட்டணி குறித்து முதல்வர் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசை தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தியே தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.