சென்னையில் காவல்நிலையம் அருகே ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொண்டை ராஜ். இவர் மீது கொலை, கொள்ளை உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி தொண்டை ராஜ் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் தொண்டை ராஜ், தனது தாயாரைப் பார்ப்பதற்காக வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தொண்டைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.