மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி துரை வைகோ அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து சென்னை எழும்பூரில் அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் வற்புறுத்தியதை தொடர்ந்து கட்சிப் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை துரை வைகோ திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யாவும், துரை வைகோவும் மனம் விட்டு பேசி கருத்து வேறுபாடுகளை களைந்ததாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய துரை வைகோ, மல்லை சத்யா வருத்தம் தெரிவித்ததால் கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றதாக தெரிவித்தார். மேலும் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, துரை வைகோவுடன் இணைந்து பயணிக்கப் போவதாக தெரிவித்தார்.