கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கருங்கல் அருகே மிடாலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஜோசப், பால்துரை உள்ளிட்ட 3 பேர் வீடு கட்டினர்.
இதுகுறித்து வருவாய்த் துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை இடிக்க ஜேசிபி இயந்திரத்துடன் அதிகாரிகள் சென்றனர். அப்போது, அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய அப்போதைய இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ராஜேஷ் குமார், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணை நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் குமாருக்கு 3 மாத சிறைத் தண்டனை மற்றும் 100 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அசன் முகமது தீர்ப்பளித்தார்.