சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி புகார் அளித்தவர்களைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகத் துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் சேலம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில் நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையை விரைந்து முடித்து ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக விளக்கம் அளித்தார். துணைவேந்தர் தரப்பில், ஏற்கனவே பல்கலைக் கழகத்தில் இது போன்ற அமைப்பு தொடங்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.