அண்ணாதுரை மற்றும் கக்கன் ஆகியோரது பெயரை கழிப்பறைக்கு வைத்த கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில் மாநகராட்சி பராமரிப்பில் இலவச நவீன கழிப்பிடம் அமைந்துள்ளது. 95 வது வார்டுக்கு உட்பட்ட இந்த கழிப்பறையில் அண்மையில் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது.
அப்போது, கழிவறையின் முன்பக்க சுவரில் அண்ணாதுரை மற்றும் கக்கன் ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்டன. மறைந்த மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் கழிவறை சுவற்றில் எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் விதமாகக் கோவை மாநகராட்சி செயல்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பேருந்து நிலையங்களுக்குத் தனது தந்தையின் பெயரை வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரை விட மகத்தான தலைவர்களின் பெயர்களை கழிப்பறைக்கு வைப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.