சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்துப் பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இசை வேளாளர் சாதி சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் குகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் அரசாணையில் இசை வேளாளர் என்பது ஆங்கிலத்தில் இசை வெள்ளாளர் என இருப்பதால், அதனைக் குறிப்பிட்டுச் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என மனுதாரருக்குக் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் ஒரே மாதிரியான பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.