பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹெல்காமில் நேற்று தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். கண்மூடித்தனமாக அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்தி மிகுந்த கவலை அளிப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைந்து மீண்டு வரவும் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, ரஷ்ய அதிபர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், எந்த நியாயமும் இல்லாத இந்த மிருகத்தனமான குற்றம் செய்ததற்கு, குற்றவாளிகள் தகுந்த தண்டனையை பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.