மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கோவை ரயில்வே நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்.
தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் ஒன்றாக கோவை ரயில் நிலையம் உள்ளது. ஆனால் அங்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததன் காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்த பாஜக மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவை ரயில் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் ரயில் சேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவரிடம் மனு அளித்தார்.
குறிப்பாக கோவையின் மக்கள் தொகை 35 லட்சத்தை கடந்துள்ளதால், நகரின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, 3 ரயில் நிலையங்களை மேம்படுத்தி தர வேண்டும், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.