திருச்சி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் உள்ள 10-வது வார்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய 3 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அப்பகுதியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியிலும், காலை மாலை என இரு வேளைகளிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் கலந்து வந்தது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அலட்சியப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மேலும், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.