அடுத்த 5 ஆண்டுகளில், அனைத்து நோய்களையும் AI-யால் குணப்படுத்த முடியும் என்று Google DeepMind CEO ( Demis Hassabis) டெமிஸ் ஹசாபிஸ் கூறியிருந்த நிலையில், அவர் ஒரு ஜீனியஸ் என்று Perplexity AI நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாராட்டியுள்ளார். யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ் ? அவரை ஏன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாராட்டினார் ? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டனைச் சேர்ந்த 48 வயதான கணினி விஞ்ஞானி, பேராசிரியர் டெமிஸ் ஹசாபிஸ் ஒரு பிறவி மேதை ஆவார். புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற ஹசாபிஸ், நான்கு வயதிலேயே சதுரங்கத்தில் நட்சத்திர வீரராக விளங்கினார்.
13 வயதில் செஸ் மாஸ்டரான டெமிஸ் ஹசாபிஸ், கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும் ‘வீடியோ கேமிங்’- கணினி விளையாட்டு வடிவமைப்பில் பணியாற்றினார். முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதற்கு முன்பு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.
2010 ஆம் ஆண்டில், இயந்திர கற்றல் நிறுவனமான (DeepMind) டீப் மைண்டை தொடங்கினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தைக் கூகுள் வாங்கியது.
Google DeepMind நிறுவனத்தின் CEO வாக இருக்கும் டெமிஸ் ஹசாபிஸ், அடுத்த 5 ஆண்டுகளில் நோய்களைக் குணப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், அனைத்து நோய்களையும் AI குணப் படுத்தும் என்று கணித்துள்ளார்.
சராசரியாக, ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க பத்து ஆண்டுகள் ஆகும். கூடுதலாக,அதைக் கண்டுபிடிக்கப் பல பில்லியன் டாலர்கள் செலவாகும். AI மூலம், ஒரு வாரத்தில் கூட ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து விடலாம்.
நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும், இது மருத்துவ உலகின் புரட்சியாகும். மேலும், AI உதவியுடன் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று டெமிஸ் ஹசாபிஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
ஒரு Phd மாணவருக்கு, ஒரு புரதத்தைக் கண்டுபிடிக்கக் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது.ஆனால், 200 மில்லியன் புரத கட்டமைப்புகளை மேப்பிங் செய்வதன் மூலம் ஒரே ஆண்டில், ஒரு பில்லியன் ஆண்டுக்கால Phd ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க முடியும்.
எனவே, 2030ம் ஆண்டில், ஒரு மருத்துவமனை வளாகம் என்பது பெரிய அளவிலான கட்டிடங்கள் இருக்காது. ஒற்றை டிஜிட்டல் உள்கட்டமைப்போடு இணைக்கப்பட்டிருக்கும்.
ஒருங்கிணைந்த கட்டளை மையங்கள், நெட்வொர்க் முழுவதும் விநியோகம் மற்றும் தேவையை LIVE- வில் கண்காணிக்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், ரோபோடிக் செவிலியர்கள் மருத்துவச் சேவையை வழங்கலாம்.
டெமிஸ் ஹசாபிஸின் நேர்காணல் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ், டெமிஸ் ஒரு ஜீனியஸ் என்றும், இது நடப்பதற்கு, உலகில் உள்ள அனைத்து வளங்களையும் அவருக்கு வழங்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
வெற்றிகரமான சிகிச்சைக்கும், பூரணக் குணமடைதலுக்கும் ஆரம்பக்கால நோய் கண்டறிதல் மிக முக்கியமானதாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவை சுகாதார,மருத்துவத் துறையில் நோய் கண்டறிதலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த தொழில்நுட்பங்கள், நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, அவற்றைத் துல்லியமாக நோய் வாய்ப்பட்டவரின் உடல்நிலைக்கேற்ற தகுந்த சிகிச்சைகளை வழங்க உதவுகின்றன.
மருத்துவச் செலவுகளைக் குறைக்கின்றன. மேலும், இக்கட்டான சூழலில், உயிரைக் காப்பாற்றுகின்றன. மருத்துவர்களுக்கு மாற்றாக அல்ல, உதவுவதற்காக AI பயன்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள டெமிஸ் ஹசாபிஸை வாழ்த்தலாம்.