சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு, அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதேபோல் அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்த பேச்சு தொடர்பாக பொன்முடி மன்னிப்பு கோரியுள்ளதாகக் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சைவம் மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துகள் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிருஷ்டவசமானது என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் பொன்முடி மீது தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, தகுந்த உத்தரவுகளுக்காகத் தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க வேண்டுமென பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.