ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மதுபான ஆலைகளில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் கூடுதலாக வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது அல்ல எனவும், தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், பொது மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.