மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை கொலை செய்வோம் என நீதிமன்ற வளாகத்தில் வெறியாட்டம் போட்ட குற்றவாளிகளை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்.
மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு, 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் புது ஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன், பிரசாந்த் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாண்டியராஜன், பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. அதனடிப்படையில் மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள்,நீதிமன்ற வளாகத்தில் இருந்த கண்ணாடியை கையால் உடைத்து, கையில் ரத்தம் சொட்டச் சொட்ட, நீதிபதியை கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். ரவுடி வெள்ளை காளியின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நீதிமன்றத்திற்குள் வெறியாட்டம் ஆடிய அவர்களை போலீசார் அடித்து அங்கிருந்து அழைத்துச் சென்று, சிறையில் அடைத்தனர்.