மாநாட்டில் பங்கேற்கக்கூடாது எனத் துணைவேந்தர்கள் வீட்டிற்கே சென்று கதவைத் தட்டி போலீசார் மிரட்டல் விடுத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
உதகையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டைக் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும், சில துணை வேந்தர்கள் உதகைக்கு வந்தும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.
துணை வேந்தர்களின் கதவை நள்ளிரவில் தட்டி மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற அசாதாரண சூழல் முன்பு எப்போதும் ஏற்பட்டது இல்லை என்று தெரிவித்த ஆளுநர்,
ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை என்று அவர் கூறினார்.
கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுவதாகவும், இதில் அரசியல் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார்.