நெல்லை இருட்டுக்கடை அல்வா, கடை உரிமம் தன் பெயரில் இருப்பதாக அக்கடையை நடத்தி வரும் கவிதாவின் சகோதரர் நயன்சிங் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் பிரபல இருட்டுக்கடை அல்வா கடை 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது அவரது 3-ம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் இந்த கடையை நடத்தி வரும் கவிதா என்பவரின் மகள் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது. அப்போது இருட்டுக்கடை அல்வா கடையை தங்கள் பெயருக்கு எழுதித்தருமாறு கூறி, மகளின் கணவர் வீட்டார் பிரச்சனை செய்வதாக கவிதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிஜிலி சிங்கின் உறவினரான ஜெயராம் சிங்கின் மகனும், கவிதாவின் சகோதரருமான நயன் சிங், இருட்டுக்கடை அல்வா கடையின் தனக்குச் சொந்தமானது என்றும், பிஜிலி சிங் அதனைத் தனது பெயருக்கே உயில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும், தனக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.