பயங்கரவாத பாகிஸ்தானைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், அந்நாட்டின் பொருளாதாரத்தை இந்தியா முற்றிலுமாக தகர்க்க வேண்டும் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
காஷ்மீரின் பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி- வாகா எல்லை உடனடியாக மூடல், பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு என 5 முக்கிய நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ளது.
தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து இந்த முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ள நிலையில், இது மட்டும் போதாது. பாகிஸ்தான் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் உடனடியாக, பாகிஸ்தானுக்கு மருந்துப் பொருட்களின் விநியோகத்தை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தானுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகள் செய்வதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான், அமெரிக்காவையும்,சீனாவையும் சாதுரியமாக தனக்கு உதவ வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு F-16 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா மானியத்தில் வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனை இருந்தாலும், அவற்றை ஒருபோதும் பாகிஸ்தான் அமல்படுத்துவதில்லை என்பது நிதர்சனம்.
மேலும், இவற்றில் அதிநவீன ஏவுகணைகள், மேம்பட்ட கடற்படை போர்க்கப்பல்கள், உளவு பார்க்கும் மற்றும் துல்லியமாகத் தாக்கும் ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் எனச் சீனாவிடமிருந்தே பாகிஸ்தான் ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு 81 சதவீதம் ஆகும்.
பொருளாதார வீழ்ச்சியில் உள்ள பாகிஸ்தானின் அந்நிய செலவாணி இருப்பு 10.5 பில்லியன் டாலர் ஆகும் . இந்நிலையில், பொருளாதார ரீதியாகப் பாகிஸ்தானை அழுத்துவது இந்தியாவுக்கு மிக எளிதாகும். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் அதிக நிதியுதவி செய்து வருகின்றன. சமீபத்தில், சீனாவுடன் சேர்ந்து, இந்த இரு நாடுகளும்,பாகிஸ்தானுக்கு 5.51 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க முன் வந்துள்ளன.
இப்படி, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றக் கடன் வாங்கும் பாகிஸ்தான், அந்த நிதியை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதை எடுத்துக் காட்டி, அந்நாடுகளின் மீதமுள்ள நிதி உதவி தவணைகளை நிறுத்த இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அசாதாரண நேரங்கள் அசாதாரண நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. பஹல்காம் தாக்குதல் அப்படியொரு வாய்ப்பை இந்தியாவுக்குத் தந்துள்ளது. சில நடவடிக்கைகள் பேசப்படாமலும், கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. அந்த வகையில், பாகிஸ்தானைத் தனிமைப் படுத்துவதில் இந்தியா ராஜ தந்திரமாகச் செயல்படவேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.