உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி நேரடியாகச் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
அதில், உயிரி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது சுற்றுச்சூழல் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்குத் தடுப்புக் காவல் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமுன்வடிவின் படி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ, உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதித் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.