தொட்டியம் அருகே கொலை சம்பவத்தை ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குமார், சந்துரு ஆகியோரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற இருவரும் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சுப்பிரமணியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்களை நிகழாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.