இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை மட்டுமே அமெரிக்காவில் விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களை சீனாவில் தயாரித்து உலகமெங்கும் விற்பனை செய்து வருகிறது.
ஓராண்டுக்கு 23.21 கோடி ஐபோன்கள் விற்பனை ஆகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 6.5 கோடி ஐபோன்கள் விற்பனை செய்யப் படுகிறது. இது மொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதமாகும்.
சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தான் ஆப்பிள் நிறுவனம், அதிக அளவில் ஐபோன்களை தயாரித்து வருகிறது.
2020 ஆம் ஆண்டில், பிரதமர் மோடியின் தற்சார்புடைய இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை என்ற திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம், நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக 14 முக்கிய துறைகளில், இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆப்பிள் நிறுவனமும், தனது ஐபோன் உற்பத்தியை, சீனாவில் இருந்து இந்தியாவுக்குக் கொஞ்சம் மாற்றியது. ‘ஐபோன்’களை தயாரிப்பதற்காக இந்தியாவில் (Foxconn) பாக்ஸ்கான், (Pegatron) பெகட்ரான், (Wistron) விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களே இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன.
2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று ஆண்டுகளில், PLI திட்டத்தில், கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்களை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது. இதில், 75 சதவீதத்துக்கும் அதிகமான மானிய நிதியை, ஐபோன் உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளனர்.
2022-23 மற்றும் 2024-25 ஆகிய மூன்று ஆண்டுகளில் மொத்தம் 6,600 கோடி ரூபாயை பாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்குச் சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 145 சதவீத வரி விதித்த ட்ரம்ப் ஐபோன்களுக்கு மட்டும் பரஸ்பர வரியில் இருந்து விலக்களித்தார். ஆனாலும், சீனா ஏற்றுமதி செய்யும் மின்னணு சாதனங்கள் மீது 20 சதவீத அடிப்படை வரி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனால், அமெரிக்காவில் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கெனவே, நடப்பு ஆண்டில், கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஐபோன் உற்பத்தி மையமாக இருக்கும் இந்தியா, விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.