இந்தியாவை அணு ஆயுதங்களால் தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பஹெல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததும், பாகிஸ்தான் ஷிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ததும் பதற்றத்தை அதிகரித்தது.
இந்நிலையில், இந்தியாவை அணு ஆயுதங்களால் தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை தடுக்க இந்தியா துணிந்தால், அவர்கள் முழு அளவிலான போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என ஹரிஃப் அப்பாஸி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் காட்சிப்படுத்தலுக்கானவை அல்ல எனவும், நாடு முழுவதும் அவற்றின் இருப்பிடங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகளும், 130 அணு ஏவுகணைகளும் இந்தியாவை குறிவைத்து தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.